தமிழ்நாட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 22.62 மி.மீ. ஆகும். 5 இடங்களில் மிக கனமழையும், 41 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 73.66 மி.மீட்டரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 72.53 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 68.60 மி.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 65.57 மி.மீட்டரும்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 62.46 மி.மீட்டரும், கடலூர் மாவட்டத்தில் 60.66 மி.மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 55.26 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42.84 மி.மீட்டரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 40.93 மி.மீட்டரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40.09 மி.மீ. மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. கடலூர் (170.2 மி.மீ.), சிவலோகம் (சித்தாறு 2) (164.2 மி.மீ.), களியல் (144.8 மி.மீ.), சித்தாறு 1 (131.6 மி.மீ.), ஊத்துக்கோட்டை (124 மி.மீ.) ஆகிய 5 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.  41 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 29.11.2021 வரை 635.42 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 352.6 மி.மீட்டரை விட 80 சதவீதம் கூடுதல் ஆகும். 2015 முதல் 2021 வரை பெய்த மழையளவை ஒப்பிட்டு நோக்கும் பொழுது 2021ஆம் ஆண்டில் தான் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இதுவரை 1300 மி.மீட்டரும் சென்னையில் 1866 மி.மீட்டரும்  மிக அதிகமாக பெய்துள்ளது. சென்னையில், கடந்த 1918 மற்றும் 1985ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்காலத்தில் 970 மி.மீட்டரும், 2005ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 1010 மி.மீட்டரும், 2015ஆம் ஆண்டு 1050 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு 29.11.2021 வரை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னைக்கு கிடைக்கப்பெற்றுள்ள மழை அளவு 1121.43 மி.மீட்டர் ஆகும். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகும். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 7593 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 3104 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த  கொள்ளளவான 224.297 T.M.C, 209.258 T.M.C இருப்பு உள்ளது. இது 93.30 சதவீதம் ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை,

நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து, நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 28.11.2021 நாளிட்ட அறிக்கையில், இன்று 29.11.2021 கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும்,

தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளை 30.11.2021, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களில் சென்னையில் - 2 குழுக்கள், திருவள்ளுரில் -  1 குழு, காஞ்சிபுரத்தில் - 1 குழு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக சுமார் 10750 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், மேலப்புலம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த 80 நபர்களும், சோளிங்கர் வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த 23 நபர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம்-மரக்காணம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த வெள்ள நீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணயாற்றிற்கு 3000 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுவதாலும்,

பூண்டி அணையிலிருந்து 12000 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், கரையோர கிராமங்களுக்கு மாவட்ட நிருவாகம் மூலம் உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், இந்தப் பகுதிகளில் வசிக்கும் 5,27,118 மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதோடு, TNSMART செயலி மூலமும், TWITTER உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் எச்சரிக்கை அனுப்பப்ட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று மாலை 4 மணி முதல்  இரவு 8 மணி வரை கோதையாறு மலை, பேச்சிப்பாறை,

சித்தாறு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு 1 மற்றும் சித்தாறு 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இந்த அணைகளிலிருந்து சுமார் 9000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.  மேலும், குழித்துறை ஆற்றில் 15000 கன அடி நீர் சென்றுகொண்டிருக்கிறது.

நிவாரண முகாம்கள்

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, பெரம்பலூர், அரியலூர், இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 182 முகாம்களில், 15164 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1503 நபர்கள் 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 3218 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* திருவள்ளூர் மாவட்டத்தில், 487 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 2639 நபர்கள் 44 நிவாரண முகாம்களிலும்,

* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 930 நபர்கள் 25 நிவாரண முகாம்களிலும்,

* விழுப்புரம் மாவட்டத்தில், 370 நபர்கள் 10 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* கடலூர் மாவட்டத்தில், 358 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,

* நாகப்பட்டினம் மாவட்டத்தில், 3260 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,

* தஞ்சாவூர் மாவட்டத்தில், 409 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

* திருவாரூர் மாவட்டத்தில், 69 நபர்கள், 2 நிவாரண முகாம்களிலும்,

* புதுக்கோட்டை மாவட்டத்தில், 388 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,

* இராமநாதபுரம் மாவட்டத்தில், 224 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

* தூத்துக்குடி மாவட்டத்தில், 907 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,

* பெரம்பலூர் மாவட்டத்தில், 82 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும்,

* அரியலூர் மாவட்டத்தில், 17 நபர்கள் 3 நிவாரண முகாம்களிலும்,

* இராணிப்பேட்டை மாவட்டத்தில், 168 நபர்கள் 5 நிவாரண முகாமிலும்,

* திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 150 நபர்கள், 1 நிவாரண முகாமிலும்,

* திருப்பத்தூர் மாவட்டத்தில், 575 நபர்கள், 15 நிவாரண முகாம்களிலும்,

* திருவண்ணாமலை மாவட்டத்தில், 947 நபர்கள் 29 நிவாரண முகாம்களிலும்,

* வேலூர் மாவட்டத்தில், 3184 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்: கடந்த 24 மணி நேரத்தில்,

*  கடலூர் மாவட்டத்தில், 1 நபர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்,

*  209 கால்நடைகளும், 5600 கோழிகளும் இறந்துள்ளன.

* 1074 குடிசைகள் பகுதியாகவும், 65 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 1139 குடிசைகளும்,

* 189 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

நாளது தேதி வரை, வடகிழக்கு பருவமழைக்காலத்தில், மழை, வெள்ளத்தால் உயிரிழந்த 59 குடும்பங்களுக்கு, 2.36 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. காயமுற்ற 13 நபர்களுக்கு 55,900 ரூபாயும், 2783 கால்நடைகளுக்கு 2.84 கோடி ரூபாயும், சேதமடைந்த 24810 குடிசைகளுக்கு 10.17 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய இனங்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி

*  மழை நீர் தேங்கியுள்ள 524 பகுதிகளில், 156 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 368 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

*  சாலைகளில் விழுந்த 4 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14305 மருத்துவ முகாம்கள் மூலம் 4,88,140 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

* மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

* 6551 புகார்கள் வரப்பெற்று, 1666 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* மாநில அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 7040 புகார்கள் வரப்பெற்றதில், 5472 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

* மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 5118 புகார்களில், 5018 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களது ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் திரு.க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: