3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றம்

டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் மசோதா விவாதமின்றி இன்று காலை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்து கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடி வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே அதனை திரும்ப பெறவேண்டும் என்று அனைவரும் வலியுறுத்திய நிலையில் தற்போது மாநிலங்களவையிலும் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று விவாதமில்லாமல் 3 வேளாண் சட்ட திருத்தங்களையும் திரும்ப பெறுவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலங்களவையிலும் இந்த மசோதா விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியில் இருந்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை கடந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டத்திருத்தங்களையும் திரும்ப பெறுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. அந்த முடிவின் படி இன்று மக்களவையில் வேளாண் துறை அமைச்சராக உள்ள நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா விவாதமின்றி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திய போதிலும் விவாதமின்றி குரல் வாக்கெடுப்பிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ள இந்த சூழ்நிலையில் மாநிலங்களவையில் இன்று 2 மணிக்கு கூடியதும் ஒன்றிய வேளாண்துறை அமைச்சராக உள்ள நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறுவதற்காக தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் ஓரிரு நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா திட்டமிட்டு மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

ஆனால் விவசாயிகளை பொறுத்தவரை 3 வேளாண் சட்ட திருத்தங்களும் கருப்பு சட்டங்களாக உள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவிலை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கை வைத்து இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தான் இரு அவைகளிலும் முதல் நாளான குளிர்கால கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசு தலைவர் நாளை அல்லது நாளை மறுநாள் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

Related Stories: