நார்த்தாமலை காப்புக் காடுகள் சுற்றுலாதளமாக மாற்றப்படுமா?சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை : மலைப்பாம்புகள் மற்றும் மான்களைக் கொண்ட நார்த்தாமலை காப்புக் காட்டில் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த சூழல் மற்றும் தொல்லியல் சுற்றுலாவை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் உள்ளது சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்ட காப்புக்காட்டுடன் கூடிய நார்த்தாமலை. 9 மலைக் குன்றுகளைக் கொண்டது இந்த நார்த்தாமலைத் தொகுப்பு காடுகள்.

விஜயாலய சோழன் காலத்தில் பாறைக் குடைவரையில் அமைக்கப்பட்ட அழகிய, அரிய விஜயாலய சோழீஸ்வரம் (சிவன் கோவில்), ராஜராஜ சோழன் காலத்தில் குடைவரையில் அமைக்கப்பட்ட கடம்பர் கோவில் ஆகியன தொல்லியல் முக்கியத்துவம் கொண்டவை. இவை தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றுடன் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் வழிபாட்டுத் தலங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும், நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோயிலும் இங்குதான் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம், திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இவற்றுக்கு நடுவே பச்சைப்பசேலென படர்ந்துக் கிடக்கும் மலை, வனத்துறையின் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது இம்மலை. சுமார் 4 கிமீ தொலைவு நடந்தால் உச்சியை அடையலாம். வழியில் சர்வ சாதாரணமாக நம்மைக் கடந்து செல்லும் அழகிய புள்ளி மான்களைக் காணலாம். தற்பொது மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் தேங்கி நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சிறிய அளவிலான நீர் வீழ்ச்சி ஓடுகிறது.

நீண்ட காலமாகவே புதுக்கோட்டை மட்டுமின்றி அருகமை மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் இருந்தும் மீட்கப்படும் மலைப்பாம்புகள் அனைத்தும் இந்தக் காட்டில்தான் விடப்படுகின்றன. இவை தவிர, முயல், காட்டுப்பன்றி, ஆந்தை, எறும்புதின்னி, உடும்பு, நரி போன்றவையும் இங்கே வாழ்கின்றன. எனவே, இந்த இடத்தை மலைப்பாம்புகளுக்கான சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சூழலியல் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறன்றனர். இதற்கான முன்மொழிவை மாவட்ட நிர்வாகம் வனத்துறைக்கு அளித்து உரிய முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாம்புகளுக்கான உணவுத் தேவை அந்தக் காப்புக்காட்டுப் பகுதியிலேயே ஏற்படுத்தப்படுமானால், உணவு கிடைக்காமல் மலைப்பாம்புகள் இரைதேடி வெளியே வந்து அருகிலுள்ள கிராம மக்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்.சுமார் 4 முதல் 8 கிமீ தொலைவுக்கு மலைக்காட்டில் நடையுடன் கூடிய சூழல் சுற்றுலாவையும் இங்கே அமலாக்கலாம். உச்சியில் இருந்து தொலைநோக்கி வாயிலாக விஜயாலய சோழீஸ்வரத்தையும், கடம்பர் கோவிலையும் பார்க்கும் வகையிலான வியூ பாயிண்ட் அமைப்பதற்கான அமைப்பும் இந்த மலையில் காணப்படுகிறது. கிராமத்து உணவு வகைகளைத் தயாரித்து வழங்குவதையும் இந்தச் சூழல் சுற்றுலாவில் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், இதேசூழல் சுற்றுலாவின் திட்டத்தில் தொல்லியல் சின்னங்களான விஜயாலய சோழீஸ்வரம், கடம்பர் கோவிலையும் பார்வையிடும் வகையில் வடிவமைத்தால் தமிழ்நாட்டின் வேறெங்கும் இல்லாத அரிய சுற்றுலாத் திட்டமாக நார்த்தாமலை அமையும்.இது குறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: நார்த்தாமலையில் பச்சைப்பசேலென படர்ந்துக் கிடக்கும் மலை, வனத்துறையின் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது இம்மலை. சுமார் 4 கிமீ தொலைவு நடந்தால் உச்சியை அடையலாம்.

வழியில் நம்மைக் கடந்து செல்லும் அழகிய புள்ளி மான்களைக் காணலாம். தற்பொது மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் தேங்கி நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சிறிய அளவிலான நீர் வீழ்ச்சி ஓடுகிறது. இதனால் இதனை பெரிய சுற்றுலா தளமாக மாற்றலாம். இதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: