ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12வது மெகா தடுப்பூசி முகாம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி-கொட்டும் மழையிலும் கலெக்டர் ஆய்வு

நெமிலி : நெமிலி ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை கொட்டும் மழையிலும், கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8,57,194 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 12வது மெகா தடுப்பூசி முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

அதன்படி நெமிலி பேரூராட்சியில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் புன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர்  உதவியுடன் நேற்று நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புன்னை தொடக்கப்பள்ளி, காவேரிபுரம் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து பனப்பாக்கம் பேரூராட்சியில் தேர்தல் அலுவலர் குமார் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் உதவியுடன் தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

 தொடர்ந்து நெமிலி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில்  பிடிஓ செல்வகுமார்  தலைமையில் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவ அலுவலர்களின் உதவியுடன், வீடு வீடாக சென்று தடுப்பூசி  செலுத்தினர். இதையடுத்து வட கிழக்கு பருவ மழை கொட்டித் தீர்க்கும் நேரங்களில், மழையில் நனைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மழையையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கவனத்துடன் மழையில்   பாதுகாப்பாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி  செலுத்துமாறு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் பிற்படுத்தப்பட்டோர்  நல அலுவலர் சேகர், நெமிலி தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

கலவை: கலவையில் வளையாத்தூர் அரசு மருத்துவமனை சார்பில் நேற்று மருத்துவர் கலைப்பிரியா, தலைமையிலான மருத்துவ குழுவினர், பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி முன்னிலையில், பன்னீர்தாங்கள் 6வது வார்டில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். அப்போது விஏஓ சுகுமார், சுகாதார ஆய்வாளர் பிரபு, தூய்மை பணி மேற்பார்வையாளர் அரங்கநாதன், பள்ளி அலுவலக உதவியாளர் பாலு, மற்றும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

காவேரிப்பாக்கம்:  காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, பொன்னம்பிள்ளையார் கோயில், தோட்டக்கார அங்காளம்மன் கோவில், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட 15 வார்டுகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அப்போது  பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், பாணாவரம் வட்டார மருத்துவ அலுவலர் டேவிட் உள்ளிட்ட  மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதேபோல் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஓச்சேரி, ஆயர்பாடி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, கட்டளை, சேரி, பன்னியூர், மகாணிப்பட்டு, துறைபெரும்பாக்கம்,  உள்ளிட்ட 29 ஊராட்சிகளிலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதில் மாலை 3 மணி நிலவரப்படி 578 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப்கென்னடி, தனசேகர், ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் தீபாகார்த்திகேயன், ஊராட்சி செயலாளர்கள், மோகன், ராஜா, சங்கர், லலிதா உட்பட பலர் உடன் இருந்தனர்.

ஆற்காடு:  ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கைரேஜாரி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ அலுவலர் தாரணி தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம சுகாதார செவிலியர் முத்துமணி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். அதேபோல் ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி அலுவலகம், தாழனூர், மாங்குப்பம்உள்பட பல்வேறு இடங்களில் நேற்று கொட்டும் மழையிலும் நடந்த முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், நேர்முக உதவியாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதேபோல் ஆற்காடு அடுத்த கே.வேளூரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த முகாமை ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் துவக்கி வைத்தார்.முகாமில் மருத்துவ அலுவலர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சத்யநாராயணன், கிராம சுகாதார செவிலியர் திலகவதி ஆகியோர் கொண்ட குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். முகாமை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, செந்தாமரை, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார், துணைத்தலைவர் ரஞ்சிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: