பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்-அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

அரியலூர் : பருவமழையின் போது பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் அனைத்து துறை அலுவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அனில் மேஷ்ராம் அறிவுறுத்தி உள்ளார்.அரியலூர் மாவட்டம், வாரணவாசி ஊராட்சியில், மருதையாற்றில் செல்லும் வெள்ள நீர் குறித்தும், மழைநீரினால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் கூறியதாவது:

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 765.5 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் 2477 ஏரி மற்றும் குளங்களில் 646 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 90 சதவீதத்திற்கு மேல் 496 ஏரி, குளங்களும், 80 சதவீதத்திற்கு மேல் 727 ஏரி, குளங்களும், 70 சதவீதத்திற்கு மேல் 268 ஏரி, குளங்களும், 50 சதவீதத்திற்கு மேல் 260 ஏரி, குளங்களும், 25 சதவீதத்திற்கு மேல் 76 ஏரி, குளங்களும், 25 சதவீதத்திற்குள் 4 ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழையினால் முழு கொள்ளளவை எட்டியுள்ள நீர்நிலைகளில் உயர்ந்து வரும் மழைநீரினை பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், 226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்தேக்கத்தில் தற்பொழுது 124.3 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

நீர்வரத்து இல்லாத காரணத்தினால் நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114.45 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போதை வரை 84.85 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு வரும் 45 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நீர் தேக்கத்திற்கு வருகை தரும் மழைநீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நீர்தேக்கத்திற்கு அதிகபடியான மழைநீர் வரும் பட்சத்தில் அதனை வெளியேற்றிடவும், நீர்தேக்கத்தின் கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பலவீனமான இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்குவதற்காக மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.மேலும், கனமழையின் காரணமாக 437.545 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 5,172.18 ஹெக்டேர் பருத்தி பயிர்களும், 176.68 ஹெக்டேர் சோளமும், 0.55 ஹெக்டேர் கம்பு பயிர்களும், 14.24 ஹெக்டேர் உளுந்து பயிர்களும் என மொத்தம் 5,800.65 ஹெக்டேர் பரப்பிளான பயிர்கள் மழைநீரினால் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், நேற்று திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சியில் மருதையாற்றில் வெள்ள பெருக்கினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மழைநீரினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை காலங்களில் ஆற்றில் வரும் வெள்ள நீரில் பொதுமக்கள் குளிக்கவும், கால்நடைகளை அழைத்துச்செல்வதையும் தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஸ்ராம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) பழனிசாமி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More