வல்லாகுளத்துபாளையம் காலனி மக்களுக்கான மயானத்திற்கு அடிப்படை வசதி செய்த தர கோரிக்கை

க.பரமத்தி : க.பரமத்தி அருகே வல்லாகுளத்துபாளையம் காலனி பகுதி மக்களுக்கான மயானத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் அத்திப்பாளையம் ஊராட்சியில் வல்லாகுளத்துபாளையம் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்தில் போதுமான அடிப்படை வசதி ஏதும் இல்லை.

மேலும் மழை காலங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்பது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறை சடலத்தை அடக்கம் செய்வதிலும், மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வல்லாகுளத்துபாளையம் காலனியை சேர்ந்த 80 வயது ஆண் வயது முதிர்ச்சி காரணமாக நேற்று இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்தில் வெட்டிய குழியில் தண்ணீர் ஊற்றெடுத்தது. இதனால் சிரமப்பட்டு தண்ணீரை வாரியிறைத்து பின்னர் அடக்கம் செய்தனர்.

மயானத்தை சுற்றிலும் சுற்றுச் சுவர் மற்றும் தகன மேடை, தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்களின் நலன் கருதி, இங்குள்ள மயானத்தை சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதி, சுற்றுச்சுவர், தகனமேடை மற்றும் தண்ணீர் டேங்க் உள் ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: