சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்குங்கள்: கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்கக்கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் 2 நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால் 30 முதல் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளியை விற்பனை செய்ய தயார் என மொத்த வியாபாரிகள் சங்கம் உறுதியளித்தனர்.

நிலுவையில் உள்ள இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம், தக்காளி மைதானத்தில், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தக்காளி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் வாகனத்தை நிறுத்தி தற்காலிகமாக தக்காளி விற்பனை செய்ய அனுமதிக்கலாமா? என  நீதிபதி சுரேஷ்குமார், சிஎம்டிஏ, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி ஆகியோரிடம் கேட்டிருந்தார். இதற்கு மார்க்கெட் கமிட்டி தரப்பில், 800 வாகனங்களை 8 இடங்களில் நிறுத்தும் அளவிற்கு வசதி உள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சங்கத்தினரை அனுமதிக்காததால் தான் விலை உயர்ந்தது என்று கூறுவது தவறு என்றும் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எவரும் தடுக்கப்படவில்லை எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரத்தை விட தக்காளி விலை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள எ சாலை, எஃப் பிளாக் அருகில் உள்ள சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. காலி மைதானத்தில் தக்காளியை லாரியில் இருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்ய மாட்டோம் எனவும் வியாபாரிகள் சங்க தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இவை அனைத்தும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில், இடைகாலமாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார். சோதனை முறையில் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறை கடைபிடித்து தக்காளியை ஏற்றி இறக்க ஒதுக்கப்படும் இடத்தில் உள்ள சாதக, பாதகங்களை இரு தரப்பும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இந்த பிரதான வழக்கின் விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

More