ஒமைக்ரான் வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை..!!

சென்னை: ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். தென் ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் மரபணு மாறிய கொரோனாவின் ஒமைக்ரான் தொற்று காரணமாக நேற்று தமிழகத்தின் சுகாதாரத்துறையானது விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன்  தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இன்று பிற்பகல் 12:30 மணிக்கு மேல் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விமான நிலையத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, தென் ஆப்ரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை முன்கூட்டியே கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற விவகாரங்கள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களையும் ஒமைக்ரான் வைரஸ் தாக்குமா? என மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்காது. அறிகுறிகள் லேசாக இருக்கும். வீட்டிலேயே சிகிச்சை பெற்றால் போதும். தற்போதே அறுதியிட்டு கூற முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் பரவிய பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: