நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் திடீர் ஆலோசனை..!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடக்கிறது. இன்றைய முதல் நாள் கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுவதால், எதிர்க்கட்சிகள், பாஜ ஆகியவை தங்கள் எம்பிக்களை அவைக்கு தவறாமல் ஆஜராக உத்தரவிட்டுள்ளன. இந்த மசோதா உட்பட 26 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டஅங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளன. அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் உயிரிழந்த விவாயிகளுக்கு இரங்கல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதனால் கூட்டத் தொடர் முழுவதும் கடும் அமளியும், பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: