குற்றால அருவிகளில் சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளம்: தரைப்பாலங்கள் உடைப்பால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்..!

தென்காசி: தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இடைவிடாது கொட்டி வரும் மழையால் முக்கிய ஆறுகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் தரைப்பாலம் சேதமடைந்து 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது. திருத்தணியில் இருளர் காலனி உள்பட பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி இருந்தவர்களை பேரிடர் குழுவினர் மீட்டனர். வந்தவாசியில் கொட்டிய மழையால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதை அடுத்து கிராம மக்கள் மருத்துவ தேவைக்கு கூட பல கி.மீ. சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் இடி மின்னலுடன் இடைவிடாது கொட்டிய கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் காட்டுமன்னார்கோவில் அருகே 3 வீடுகள் இடிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பெருமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேதாரண்யம் தலைஞாயிறு பகுதிகளில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Related Stories:

More