தொடர் கனமழை காரணமாக குண்டும் குழியுமான ஜிஎன்டி சர்வீஸ் சாலை: சீரமைக்க கோரிக்கை

புழல்: தொடர் மழையால் ஜிஎன்டி சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புழல், காவாங்கரை, தண்டல்கழனி, செங்குன்றம், பாடியநல்லூர்,  சோழவரம், தச்சூர் கூட்டு சாலை வழியே கொல்கத்தா செல்லும் ஜிஎன்டி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை முற்றிலும் சேதமடைந்தது.

இந்த சர்வீஸ் சாலை பல ராட்சத பள்ளங்கள் உருவாகி, குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும், உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்த சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்கும்படி, ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் இப்பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை அப்புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த சர்வீஸ் சாலையில் உள்ள ராட்சத பள்ளங்கள் மூலமாக உயிரிழப்பு போன்ற பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

Related Stories:

More