பெரியபாளையம், பள்ளிப்பட்டு பகுதிகளில் 1300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது: விவசாயிகள் வேதனை; நிவாரணம் வழங்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அத்திவாக்கம், கிளாம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய  கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி விட்டது. மேலும், நேற்று முன்தினம் மற்றும் நேற்று முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், ஜெயபுரம், ஆலப்பாக்கம் ஆகிய கிராம சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிழைப்பு தேடி வேலைக்கு செல்ல  முட்டியளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, `அத்திவாக்கம், கிளாம்பாக்கம்,  ஆலப்பாக்கம் கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் செய்துள்ளோம். இந்த நெற்பயிர் நடவு நடப்பட்டு 50 நாட்கள் ஆகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் எங்களின் நெல் பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி விட்டது. மழைநீர் வடிவதற்கும் வழியில்லை. பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. மேலும், இந்த மழையால் அத்திவாக்கம், ஜெயபுரம் கிராம சாலையில் முட்டியளவு மழைநீரில் வேலைக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்தந்த கிராமங்களில் உள்ள ஏரிக்கு செல்லும் கால்வாய்களை சீரமைக்காததே. எனவே, பொதுப்பணித்துறையினர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

பள்ளிப்பட்டு: திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் நெற்பயிர் முற்றிலும் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் தாமனேரி, வீரமங்கலம், பாலாபுரம், ரங்காபுரம், வெடியங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முற்றிலும் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: