சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு மழை வெள்ளத்தில் மிதந்தது முதலையா? மரக்கட்டையா?..பொதுமக்களிடையே கடும் பீதி

கூடுவாஞ்சேரி:  கூடுவாஞ்சேரி அருகே மழை வெள்ளத்தில் மிதந்தது முதலையா? மரக்கட்டையா? என தெரியாமல் சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது.  தற்போது, கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, மேலும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையிலும், இதேபோல், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையிலும் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால், சாலைகள் சில பகுதிகளில் அடித்து செல்லப்பட்டுள்ளன.  

இந்நிலையில், கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் ஆர்ப்பரித்து ஓடும் மழை நீர் வெள்ளத்தில் முதலை மிதந்து வந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் இடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரியிடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். மேலும், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகத்திடம் கேட்டதற்கு, இரவு 7 மணி வரை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆய்வு செய்தோம். அது முதலை அல்ல மரக்கட்டை என்று பதில் கூறினார்.  இதனால், அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More