திருப்போரூர் ஏரிகளில் தொடர்ந்து நீர் வெளியேற்றம்: பொதுமக்கள் கடும் அவதி

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால் இரண்டாவது நாளாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக தையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் தையூர் - காயார் சாலை இரண்டு இடங்களில் துண்டிக்கப்பட்டது. அதேபோன்று தையூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் மீது தற்போது பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக இந்த தற்காலிக சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தையூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு பகுதியினர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், தையூர் ஏரியின் உபரி நீரால் கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து மார்க்கெட் சாலை, வீராணம் சாலைகளில் கால்வாய் தோண்டப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.

 திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கி.மீ. தூர இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது உயர் மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கொண்டங்கி, சிறுதாவூர், மானாம்பதி, ஆமூர், தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில்  உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் உப்பளங்கள் வழியாக பக்கிங்காம் கால்வாயில் சென்று சேர்கிறது. இதனால் திருப்போரூர் - நெம்மேலி சாலையில் உள்ள உப்பளம் முழுவதும் நீரில் மூழ்கி சாலையை மூழ்கடித்தது. இதை ஏராளமான பொதுமக்கள் சுற்றுலாத் தலம் போல் சென்று பார்வையிட்டனர். ஒரு சிலர் கார்களை எடுத்துச் சென்று நீரில் மூழ்கிய சாலையில் சாகசத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய விரால்பாக்கம் சித்தேரி மர்ம நபர்களால் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டது. இதன் காரணமாக செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் வெள்ள நீர் சென்றது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா சேகர் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு மண் மூட்டைகளை கொண்டு ஏரி நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர், ரத்தினமங்கலம் ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீரால் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்த தமிழ்நாடு ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வந்து பார்வையிட்டு சாலையை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 874 ஏரிகள் நிரம்பி வழிகிறது

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வு மண்டலத்தால் நேற்று முன்தினத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 941 ஏரிகள் நிரம்பி வழிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 355 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், 25 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாக நிரம்பியுள்ளன. இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 519 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 9 ஏரிகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியுள்ளன. பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளான மாகரல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சிபோல் உபரிநீர் வெளியேறுகிறது.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.  கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் யூனியன் கட்டுப்பாட்டிலுள்ள 293 ஏரி மற்றும் குளங்கள் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், உடையும் தருவாயில் இருந்த பல்வேறு ஏரிகளின் கரைகள் உடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகள் கட்டிப்போட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பாலாற்றில் இதுவரை இல்லாத அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வல்லிபுரம் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க பாலாற்றில் போடப்பட்டிருந்த மோட்டார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பல்வேறு பகுதிகளில் புதிய போர்கள் அமைத்து குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More