கடன் வாங்கிய பாவத்துக்கு சீனாவிடம் ஏர்போர்ட்டை இழக்கும் உகாண்டா

பீஜிங்: சீனாவிடம் கடன் வாங்கிய பாவத்துக்கு தனது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் இழக்கக் கூடிய தர்மசங்கடமான நிலைக்கு உகாண்டா நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள உகாண்டா, மிகவும் ஏழ்மையான நாடு. அந்நாடு சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.1,500 கோடி கடன் வாங்கியது. கடனுக்கு 2 சதவீதம் வட்டி. 20 ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டும். 7 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்பது விதிமுறை. உகாண்டாவில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான எண்டெபெ விமான நிலையத்தை மேம்படுத்ததான் உகாண்டா அரசு இந்த கடனை வாங்கி உள்ளது.

ஆனால் கடனை திருப்பி செலுத்த தவறினால், எண்டெபெ விமான நிலையம் உட்பட சில அரசு சொத்துக்கள் அடமானமாக பெறப்படும் என கடுமையான விதிமுறையை சீனா வகுத்துள்ளது. அதுமட்டுமின்றி எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டுமெனவும் கடன் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த விஷயத்தில் உகாண்டா எந்த சர்வதேச நாட்டின் உதவியையும் நாட முடியாது. வேறு வழியில்லாமல் கடன் வாங்கிய உகாண்டா இந்த கடுமையான விதிகளை மாற்ற சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தனது குழுவையும் பீஜிங் அனுப்பியது. ஆனால் சீன அதிகாரிகள் எதற்கும் மசியவில்லை. உகாண்டா குழு தோல்வியுடன் நாடு திரும்பி உள்ளது. இதன் காரணமாக சீனாவிடம் உகாண்டா வசமாக சிக்கி உள்ளது. நிச்சயமற்ற பொருளாதார சூழலில் அந்நாடு தனது ஒரே சர்வதேச விமான நிலையத்தையும் சீனாவிடம் இழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கடன் ஒப்பந்தத்தில் தவறு செய்து விட்டதாக அந்நாட்டு நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பும் கோரி உள்ளார்.

Related Stories: