உயர்மட்ட குழு ஆலோசனை சர்வதேச விமான சேவை தொடங்குவதில் தாமதம்?

புதுடெல்லி: சர்வதேச விமான சேவையை திட்டமிட்டபடி டிசம்பர் 15ம் தேதி தொடங்குவது குறித்து அரசின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்கான விமான சேவை வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என ஒன்றிய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பரவல் உலக நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், ஒமிக்ரான் வைரசால் உலகளாவிய தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து மறுஆய்வு செய்வது எனவும், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் மறுஆய்வு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: