ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்கு அனுமதிக்ககோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: பராமரிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என முன்னதாக தொடரப்பட்டுள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசு அதுகுறித்த அரசாணையும் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஆலையில் பராமரிப்பு பணியை  மேற்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேதாந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும். மேலும் தற்போது ஆலை அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆலையின் உள்ளே இருக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள் தேங்கியுள்ள தண்ணீரால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அதனை சீர் செய்யும் விதமாக ஆலையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். அதனால் அதுகுறித்து முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More