ஒமிக்ரான் வைரசிடமிருந்து மக்களை காக்க ஊரடங்கு, பயண தடையால் பலன் கிடைக்காது: பூஸ்டர் டோஸ் போட நிபுணர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒமிக்ரான் வைரசிடமிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கங்கள் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள், செய்யக் கூடாத விஷயங்களை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அந்த வகையில், ஊரடங்கு, பயண தடைகளை விதிப்பதால் எந்த வகையிலும் முழு தீர்வை பெற முடியாது என அவர்கள் கூறி உள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உருமாறிய அதிபயங்கர கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி இருப்பது படிப்படியாக தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் பயணத் தடையை விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விமான சேவையை நிறுத்தி உள்ளன. இஸ்ரேல் போன்ற நாடுகளில் மீண்டும் அவசர நிலை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், ஒமிக்ரான் வைரசிடமிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடுகள் செய்யக்கூடாத ஐந்து விஷயங்கள்:

1. ஊரடங்கு போன்ற கண்மூடித்தனமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். உள்ளரங்குகளில் மக்கள் கூடுவதை தடை செய்யலாம். முந்தைய அலைகளில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தோல்வி அடைந்துள்ளன. 3 வாரத்திற்கும் மேலாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தென் ஆப்ரிக்கா அரசு தோற்றுள்ளது. பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் தொற்று பரவல் காலத்தை தற்காலிகமாக தள்ளிப் போடுமே தவிர தீர்வு தராது.

2. உள்நாட்டு,சர்வதேச பயணத் தடைகளை விதிக்க வேண்டாம். இந்த தடையால் பயன் கிடைக்கும் என சில அரசுகள் நம்புவது அப்பாவித்தனமாக இருக்கிறது. எனவே, இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவும் வரை நீங்கள் உலகின் பிற பகுதிகளை மூடும் தீவு நாடாக இருக்க வேண்டி வரும். இதுவும் பாதிப்பை தள்ளிப் போடுமே தவிர பலன் தராது.

3. செயல்படுத்த முடியாத விதிமுறைகளை அறிவிக்க வேண்டாம். மது விற்பனைக்கு தடை விதிப்பது, சந்தைகளை மூடுவது என உள்ளூர் சூழலில் செயல்படுத்த முடியாத விதிமுறைகளை அறிவிக்க வேண்டாம். மக்கள் அவற்றைக் கடைபிடிப்பதாக பாசாங்கு செய்ய வேண்டாம்.

4. அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு தடுப்பூசி,பூஸ்டர் டோஸ்களை தாமதப்படுத்தக் கூடாது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களுக்கு இலக்காக வேண்டும்.

5. ஹெர்டு இம்யூனிட்டி எனும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையை நிச்சயம் பின்பற்றக் கூடாது. நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்காமல், அவர்கள் உடலில் தாமாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாக அனுமதிப்பதுதான் இக்கொள்கை. அத்தகைய நிலை உருவாக 60 சதவீத மக்களுக்கு அந்த நோய் தாக்கம் ஏற்பட வேண்டும். அதற்குள் ஏற்படும் உயிரிழப்பு பல ஆயிரமாக அதிகரிக்கும். இது, அபாயகரமான கொள்கை.

நாடுகள் செய்ய வேண்டிய பத்து விஷயங்கள்

1சுகாதார வசதிகள் தயார் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கை சுத்தம் பராமரித்தலை ஊக்குவிக்க வேண்டும்.

3அனைத்து உட்புற இடங்களுக்கும் தடுப்பூசி பாஸ்போர்ட்களை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே உள்ளரங்குகளில் அனுமதி என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்.

4தடுப்பூசி போடப்படாதவர்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்.

5அதிக ஆபத்துள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட வேண்டும்.

6பொறுப்பான நடத்தையை ஊக்குவிக்க வேண்டும்.

7 பிராந்திய மட்டத்தில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் கிடைப்பதை கண்காணிக்க வேண்டும்.

8வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

9அறிவியலைப் பின்பற்ற வேண்டும், அரசியலுக்காக அதை சிதைக்கக் கூடாது.

10கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எல்லையை மூடிய இஸ்ரேல் நியூயார்க்கில் எமர்ஜென்சி

புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் இஸ்ரேல் நாட்டவருக்கு தொற்றியிருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டு அனைத்து நாடுகளுடனான எல்லையை மூடுவதாக நேற்று அறிவித்தது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி இருப்பதால், அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டது இஸ்ரேல். இதே போல, அமெரிக்காவின் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், தங்களுடைய மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். குளிர்காலம் தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கையை அவசர நிலையை அமல்படுத்தி இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி 10 நாளில் முடிவு

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கும், முழுமையாக தடுப்பூசி செலுத்திய பிறகும் நோய் தொற்று அபாயம் உள்ளவர்களுக்கும் கூடுதல் தடுப்பூசி டோஸ் செலுத்த ஆலோசிக்கப்படும். இதுதொடர்பாக புதிய கொள்கை இன்னும் 10-15 நாட்களில் இறுதி செய்யப்படும்’’ என்றார்.

எந்தெந்த நாடுகளில் பரவியது?

தென் ஆப்ரிக்காவின் ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே பல நாடுகளில் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. அதாவது,

* ஆஸ்திரேலியா

* இங்கிலாந்து

* இத்தாலி

* ஜெர்மனி

* செக் குடியரசு

* நெதர்லாந்து

* இஸ்ரேல்

* ஹாங்காங்

* போஸ்ட்வானா

* பெல்ஜியம்

ஆகிய நாடுகளில் ஒமிக்ரான் தொற்றுள்ளவர்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் இந்த வகை வைரஸ் பரவியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என அந்நாட்டு அரசின் தொற்றுநோயியல் முதன்மை நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி கூறி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் இருந்து நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு விமானத்தில் திரும்பியவர்களை பரிசோதனை செய்ததில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 13 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

Related Stories:

More