புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரசை தடுக்க தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், கண்காணிப்பை அதிகரித்தல், மேம்பட்ட சோதனை, ஹாட்ஸ்பாட்களை அடையாளம் காணுதல், தடுப்பூசி வேகத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள  மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது.  இந்த வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநில அரசுகளின் முதன்மை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாட்டில் நோய் கண்காணிப்பு அமைப்பு வலுவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், குறிப்பாக ஆபத்துமிக்க நாடுகளாக ஒன்றிய அரசால் வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* சர்வதேச விமானங்கள் மூலம் வரும் பயணிகளின் கடந்த கால பயண விவரங்களைப் பெறுவதற்கான வழிமுறை ஏற்கனவே உள்ளது, இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

* ஆபத்துமிக்க நாடுகளில் இருந்து பயணிகளை அனுமதிப்பதில் ஒன்றிய அரசின் நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* புதிய கொரோனா வைரசின் மாறுபாட்டை திறம்பட நிர்வகிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக அமலாக்க வேண்டும். சேகரிக்கப்படும் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கான உடனடியாக ஒன்றிய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பபட வேண்டும்.

* புதிய வைரசின் தடுக்க போதுமான சோதனைகள் வேண்டும். போதுமான சோதனைகள் இல்லாத நிலையில், தொற்று பரவலின் உண்மையான அளவைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே மாநிலங்கள் பரிசோதனை உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

* ஹாட்ஸ்பாட்களை விரைவாக வரையறுக்க வேண்டும். அதிகரிக்கும் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் குறைவான தொற்று விகிதத்தை அடைவதை மாநிலங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

கொரோனா டேட்டா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி குறித்த புள்ளி விவரம்:

புதிதாக பாதித்தோர்        8,774 பேர்

மொத்த பாதிப்பு        3.45 கோடி

புதிய பலி            621 பேர்

மொத்த பலி        4.68 லட்சம்

சிகிச்சை பெறுவோர்        1.05 லட்சம்

தென் ஆப்ரிக்கர்களுக்குடெல்டா வைரஸ் பாதிப்பு

 கடந்த ஒரு மாதத்தில் தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெங்களூரு வந்த தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் தனிமைப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பீதியை கிளப்பியது. 2 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 2 பேரும் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதியானது. இதனால் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை இந்தியாவுக்குள் நுழையவில்லை என நம்பப்படுகிறது.

கேரளா வருபவர்களுக்கு 7 நாள் தனிமை

இது குறித்து கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: ‘ஒமிக்ரான் வைரஸ்  பரவலை தொடர்ந்து  இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்,  இஸ்ரேல், ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, போர்ட்ஸ்வானா, பிரேசில்,  வங்காளதேசம், சீனா, மொரிசீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய  நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை  தீவிரமாக கண்காணிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில்  இருந்து கேரளாவுக்கு வருபவர்கள் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருக்க  வேண்டும். அங்கிருந்து வருபவர்களில் 5 வயதுக்கு மேல் உள்ள அனைத்து  பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த  வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி தோற்று போகும்?

* கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

* தென் ஆப்ரிக்காவுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டுமென டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

* கேரளா, மகாராஷ்டிராவில் இருந்த வரும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஒமிக்ரான் வைரசின் ஸ்பைக் புரதத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் இருப்பதால் அது தடுப்பூசியின் பாதுகாப்பை தாண்டி மனித உடலில் நுழையும் சாத்தியங்கள் இருப்பதாக எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.

Related Stories: