முதல் இன்னிங்சில் வங்கதேசம் முன்னிலை

சட்டோகிராம்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லிட்டன் தாஸ் 114, முஷ்பிகுர் 91, மிராஸ் 38* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 145 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாளான நேற்று அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 286 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபித் அலி 133 ரன் (282 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல்லா ஷபிக் 52 ரன், பாகீம் அஷ்ரப் 38 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 44.4 ஓவரில் 9 மெய்டன் உள்பட 116 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். எபாதத் உசேன் 2, மிராஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 44 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்து திணறி வருகிறது. கை வசம் 6 விக்கெட் இருக்க, அந்த அணி 83 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: