கொரோனாவால் பாதிக்கப்பட்ட டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் மரணம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான சிவசங்கர் நேற்று மரணம் அடைந்தார்.  தமிழ் உள்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800 படங்களுக்கு மேல் நடனக்காட்சி அமைத்தவர், சிவசங்கர் (73). பாலு மகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தில் ரோகிணி நடனமாடிய ‘ஆச அதிகம்  வெச்சு’, தனுஷ் நடித்த  திருடா திருடி படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’  போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு அவர் நடனக் காட்சி அமைத்துள்ளார். வரலாறு, ஒன்பது ரூபாய் நோட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, தில்லுமுல்லு, அரண்மனை, கஜினிகாந்த், தானா சேர்ந்த கூட்டம், சர்கார் உள்பட பல படங்களில்  குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பூவே உனக்காக, விஷ்வ துளசி, வரலாறு, உளியின் ஓசை  ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடன இயக்குனர் விருது பெற்றுள்ளார். தெலுங்கில் வெளியான மகதீரா படத்தின் சிறந்த நடனத்துக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர், அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூவரில் சிவசங்கர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நுரையீரலில் 75 சதவிகிதம் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது மருத்துவச் செலவுக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7.44 மணியளவில் சிவசங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

More