லாரியில் மோதி பயங்கர விபத்து இறுதி சடங்குக்கு சடலத்தை எடுத்து சென்ற 18 பேர் பலி

கொல்கத்தா:  மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து சென்ற வாகனம் லாரியில் மோதியதில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட  18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலத்தின் நைடா மாவட்டத்தில் உள்ள சக்டாவில் இருந்து நபாத்விப் பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு இறந்தவரின் சடலத்தை எடுத்துக்கொண்டு அவரது உறவினர்கள் மினிலாரியில் சென்று கொண்டிருந்தனர். பெண்கள், சிறுவர்கள் என சுமார் 35 பேர் சவப்பெட்டியுடன் சென்றனர்.  நேற்று அதிகாலை 3 மணியளவில் ஹன்ஸ்காலி மாநில நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கற்கள் ஏற்றி நின்றிருந்த லாரியில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மினிலாரியில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணாநகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும், சிகிச்சை பலனின்றியும் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். சடலத்தை இறுதி சடங்கிற்காக எடுத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: