நாடாளுமன்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் திமுக தரப்பில் 11 அம்ச கோரிக்கை: டெல்லியில் எம்பி டி.ஆர்.பாலு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி

புதுடெல்லி: வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட மொத்தம் 11 அமசங்கள் கொண்ட கோரிக்கையை நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சி ஆலோசனை  கூட்டத்தில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக எம்பிக்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக தெரிவித்தனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சி அவை குழு தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், ‘திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அவர்கள் கூறுகையில், ‘இன்று(நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் திமுக தரப்பில் 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதில், வெள்ள சேதம் மற்றும் பயிர் சேதத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்.மூன்று வேளான் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்,  பெட்ரோல்,  டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்,  முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுமூக முடிவு எட்ட ஒன்றிய அரசு உரிய முன்னெடுப்பை உருவாக்க வேண்டும்,  மேகதாது அருகே அணை கட்ட அனுமதி வழங்க கூடாது,  புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கட்சத்தீவில் தமிழக மீன்வர்களுக்கான மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

 இலங்கை தமிழர்களுக்கு  இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும், புதிய வகை கொரோனா மற்றும் பரவலை கட்டுப்படுத்த தேவையான நிலையை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும், பருவநிலை மாநாட்டில்  எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர ஏழு பேர் கொண்ட ஒன்றிய குழு தமிழகத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் ஆய்வுக்கு பின்னரும் மழை தொடர்வதால் மீண்டும் ஒருமுறை அறிக்கையை திருத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதால் அவை குறித்தும் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரண்டு அவைகளிலும் பேச உள்ளோம்.

வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றாலும் போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் திமுக தரப்பில் கோரப்பட்டது. திமுக மட்டுமல்ல வேறு சில கட்சிகளும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளன, இதே போல் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது தொடர்பாகவும் திமுக கட்டாய இரு அவைகளிலும் குரல் கொடுக்கும்.ஐந்து மாநில தேர்தல் தான் விவசாய சட்டங்களின் மீது ஒன்றிய அரசுக்கு பயத்தை ஏற்படுத்தி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்துள்ளது. மரபுக்கு மாறாக ஒரு சட்டத்தை திரும்ப பெறுவது  குறித்து அமைச்சரவை முடிவு எடுப்பதற்கு முன்பாகவே பிரதமர் அறிவித்தார். இதுபோன்ற மரபு மீறல் பாஜ ஆட்சியில் மட்டுமே நிகழ்கிறது’.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: