நீதிமன்ற உத்தரவால் மூடிக்கிடக்கும் பட்டாசு ஆலைகள் நாளை நல்ல தீர்ப்பு கிடைக்குமா?...நம்பிக்கையோடு காத்திருக்கும் உற்பத்தியாளர்கள்

சிவகாசி: உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். பட்டாசால் காற்று மாசு ஏற்படுவதால் அதை வெடிக்க நாடு முழுவதும் தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து  பட்டாசில் பேரியம் நைட்ரேட் என்ற வேதியல் பொருளை சேர்க்கக் கூடாது என்றும், சரவெடி பட்டாசு தயாரிக்கக்கூடாது என்றும் 2018ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பட்டாசு தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பேரியம் நைட்ரேட் ரசாயனமின்றி லட்சுமி வெடி, குருவி வெடி, சிவப்பு கம்பி மத்தாப்பு, ராக்கெட் வெடி உட்பட 20 சதவீத பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க இயலும். அத்துடன் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் சரவெடி தான் அதிகம் உற்பத்தியாகிறது. கடந்த மாதம் 30ம் தேதி பட்டாசு ஆலைகள் மூடப்பட்ட நிலையில் ஒருமாதமாகியும் மீண்டும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. சரவெடிக்கு அனுமதி கோரி பட்டாசு தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன. சிவகாசி பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை (நவ. 30) விசாரணைக்கு வருகிறது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழில் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசின் வருகையால் இந்திய பட்டாசு விற்பனை பாதிக்கிறது என போராடினோம். இப்போது பட்டாசுக்கு தடைவிதிக்க வேண்டும் என வழக்கை சந்திக்க வேண்டியுள்ளது. இனியாவது நல்ல தீர்ப்பு வந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

Related Stories:

More