ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

வேளச்சேரி: அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையை சேர்ந்தவர் செந்தில் (39), ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இதையடுத்து,  மருத்துவர் பைரவி என்பவரை செந்தில் 2வது திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கும், முதல் கணவருக்கும் பிறந்த ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பைரவிக்கு கடந்த 27ம் தேதி வளைகாப்பு விழா நடந்தது. இதையடுத்து, பைரவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

செந்தில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் செந்தில் மயங்கி கிடந்தார். பக்கத்தில் துப்பாக்கி கிடந்தது. தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், செந்திலை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More