இசிஆர் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் முக்கிய தடமாக கிழக்கு கடற்கரை சாலை திகழ்கிறது.  சென்னையில் இருந்து இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை 7 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பதிக்கப்பட்ட ராட்சத குழாய் மூலம் ஏற்பட்ட விரிசல் காரணமாக பள்ளம் ஏற்பட்டது என தெரிய வந்தது. அதை தொடர்ந்து, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் பெக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை சரி செய்தனர். இதனால், அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

More