பெங்களூரு தொழிலதிபரிடம் ரூ.2.25 கோடி மோசடி சென்னையில் மோசடி கும்பல் தங்கம் வாங்கியது அம்பலம்: கர்நாடக போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.150 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.2.25 கோடி மோசடி செய்த மர்ம நபர்கள் அந்த பணத்தில் சென்னையில் தங்கம் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு சுத்தகுண்டேபாளையாவை சேர்ந்தவர் கிரிஷ். சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வங்கியில் கடன் கேட்டு அலைந்தார். ஆனால் யாரும் வழங்கவில்லை. இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த ராவ் மற்றும் ஸ்ரீராமுலு என்ற 2 இடைத்தரகர்கள் கிரிஷை சந்தித்து, தங்களுக்கு தெரிந்த நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

அவர்களிடம் சென்று கேட்டால், எந்தவிதமான சொத்துகளும் இல்லாமல் கடன் வாங்கி தருவார்கள் என்று கூறினார். இதை நம்பிய கிரிஷ், இடைத்தரகர்கள் கூறியபடி, சுதாகர், ராகவன், விவேகானந்தா ஆகியோர் அடுத்தடுத்து தொடர்பு கொண்டார். அவர்கள் எங்கள் நிதி நிறுவன உரிமையாளர் டேனியல், அவர் உங்களிடம் பேசுவார். உடனே பணம் கிடைத்துவிடும் என்று கூறினார். அதன்படி டேனியல் கிரிசிடம் பேசினார். அப்போது, ரூ.150 கோடி கடன் வாங்குவதற்கு முன்னதாக 3 மாத வட்டி தொகையாக ரூ.3.30 கோடி வழங்கவேண்டுமென்று கூறினார்.

அவ்வளவு பணம் தரமுடியாது என்று கூறியதும், ரூ.2.25 கோடி பேசி முடிக்கப்பட்டது. நவ.15ம் தேதி கிரிஷ் ரூ.2.25 கோடி டேனியல் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் 4 பேரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு விட்டது. இது குறித்து கிரிஷ் சுத்தகுண்டேபாளையா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அந்த கும்பல் சினிமா பாணியில் சென்னைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் தங்கமாக மாற்றி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய சென்னை வந்துள்ள பெங்களூரு போலீசார் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்னர்.

* மோசடி பணத்தில் தகராறு பாடகியின் தந்தை கொலை?

பெங்களூரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கிரிஷை முதலில் தொடர்பு கொண்டவர்களில் திரைப்பட பாடகி ஹரிணியின் தந்தை ஏ.கே ராவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இவர், கடந்த 23ம் தேதி சுத்தகுண்டேபாளையா ரயில்வே தண்டவாளத்தில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரயில் மோதி இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் சில நாட்கள் கழித்து, தந்தையில் மரணத்தில் சந்தேகம் உள்ளது. கொலையாக இருக்ககூடும் என்று அவரது மனைவி மற்றும் மகள் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மோசடி வழக்கில் ஏ.கே ராவுக்கு மறைமுக தொடர்பு இருப்பதால், அந்த கும்பலை சேர்ந்தவர்களே அவரை கொலை செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசாருடன், சுத்தகுண்டேபாளையா போலீசாரும், விசாரணை தொடங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: