தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனில் உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

சென்னை: சென்னையில் நடந்த ‘சிஐஐ கனெக்ட் 2021’ என்ற இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற தொழில்நுட்பங்கள் முன்னெப்போதையும் விட வேகமாக வளர்ந்து வருகின்றன. இதன் காரணமாக நமது தொழில்முறை வாழ்க்கையானது மேம்பட்டு வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறன்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும், தொழில்நுட்பத்தில் மக்களை திறமையானவர்களாக மாற்றுவதற்கான பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   

மாநிலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவதற்கும், எதிர்காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் இந்த ‘கனெக்ட் 2021’ மாநாடு ஒரு முக்கிய தூணாக செயல்படுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கை அதிகரிப்பதற்கும், தேசிய அளவில் அதிக சதவீத பங்களிப்பை வழங்குவதற்கும் இந்திய தொழில் கூட்டமைப்பு தொடர்ந்து பணியாற்றும்.  

இவ்வாறு அமைச்சர் பேசினார். மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை  செயலாளர் நீரஜ் மிட்டல், தொழில் கூட்டமைப்பு தலைவர் சந்திரகுமார்,  கேபிஎம்ஜி நிறுவனத்தின் தலைவர் நாராயணன், ஹெச்சிஎல்  லிமிடெட்டின்  சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர்  கல்யாண் குமார், கனெக்ட் 2021 தலைவர் ஜோஷ் பவுல்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More