மழை நேரத்தில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது? கட்டுமான பொறியாளர் விளக்கம்

சென்னை: மழை நேரத்தில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது தொடர்பாக கட்டுமான பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னைகட்டுமான பொறியாளர் சங்க தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது: கட்டிடங்களில் சிறிய அளவில் விரிசல் இருந்தால் சாதாரணமான விரிசல் தான். கால் இன்ச்க்கு மேல் விரிசல் இருந்தால் கட்டிட பொறியாளரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். ஏற்கனவே, விரிசல் இருந்து பெரிதாகிறது என்றால் நாம் முதலில் அந்த விரிசல் அதிகமாகிறதா என்பதை பார்க்க வேண்டும். விரிசல் பெரிதாக இருந்தால் கையால் முதலில் சுவற்றில் தேய்த்து பார்க்க வேண்டும்.

விரிசலுக்கு மேல் மற்றும் கீழ் பகுதியில் ஒரே அளவில் இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. நாம் கையை வைத்து தேய்க்கும் ஒரு பக்கம் மேலே சென்று, ஒரு பக்கம் உள்ளே சென்றால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீர் கட்டிடத்தை சுற்றி  நின்றால் வடிகாலுக்கு வழியில்லை என்றால் நாம் முதலில் அடைக்க வைக்க வேண்டியது டாய்லெட்டை தான். அப்போது தான் அந்த டாய்லெட் நீர் வெளியே வராது. மின் இணைப்பை துண்டிக்க மின்சார பெட்டியில் உள்ள  பீஸ் கேரியரை எடுத்து விட வேண்டும். டாய்லெட்டில் பிளாஸ்டிக் கவர் அடைத்திருக்கும். அந்த மாதிரியான சமயத்தில் மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் மற்றும் கழிவு வடிகால் வாரிய ஊழியர்கள் வருவார்கள் என்று காத்திருக்கக் கூடாது. முதலில் நாமே அந்த டாய்லெட்டில் லைனில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எல்லா நேரத்தில் நாம் ஊழியரை எதிர்நோக்கி இருக்க கூடாது.

மழைக்காலத்தில் கட்டிடத்தின் உள் மற்றும் கட்டிடத்தின் தரை நிச்சயம் கீழே இறங்கும். கட்டிடம் அடித்தளம் அமைக்கும் போது, அதை தண்ணீர் ஊற்றி பலமாக இருக்க செய்வார்கள். ஆனால், சிலர் அதை செய்யாமல் இருந்தால் தரை கீழே இறங்க வாய்ப்புள்ளது. மழையில் தான் தரை இறங்கும். அப்படி இருக்கிறது என்றால் அருகில் உள்ள பொறியாளரை அழைத்து கேட்க வேண்டும். மழை நேரங்களில் மொட்டை மாடிக்கு சென்று மழை நீர் வடிகால் குழாய் அடைத்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மேலும், மழை நீர் சிலாப்பில் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் மேற்கூரை வழியாக வீட்டிற்குள் வடியாமல் இருக்கும். அப்படி செய்யாமல் இருந்தால் கட்டிடம் பலவீனமடைந்து விடும்.

மழை நீர் தேங்கி கிடப்பதால் வீட்டிற்குள் தங்க முடியாது என்று வெளியே செல்பவர்கள் பீஸ் கேரியரை எடுத்து விட வேண்டும். இல்லையெனில் தண்ணீர் தேங்கினால் மின்சாதாரன பொருட்கள் தீ பிடித்து வெடித்து விடும். மழை நீர் வீட்டை சுற்றி தேங்காமல் இருக்க வடிகால்கள் அடைத்து இருக்கிறதா என பார்க்க வேண்டும். பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால்  தான் மழை நீர் வடிகால் வழியாக செல்ல முடியாமல் மழை நீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது.  எனவே, மழை நீர் தேங்குவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் வீசக்கூடாது. குப்பை தொட்டியில் தான் போட வேண்டும். அப்போது தான் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: