தமிழகம் முழுவதும் வெள்ள நீரில் சிக்கிய 711 பேர் மீட்பு: நாய், பூனை உட்பட 891 விலங்குகளும் காப்பாற்றப்பட்டன

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் ஏற்பட்டுள்ள தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை மாநகர மற்றும் புறநகர்களில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபி கரன் சின்ஹா உத்தரவுப்படி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அந்த வகையில் ஈரோடு, தர்மபுரி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் 5 தீயணைப்பு ஊர்திகளில் மற்றும் 100 தீயணைப்பு வீரர்கள், படகுகள் மற்றும் இதர மீட்பு உபகரணங்களுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் தீயணைப்புத்துறை வடக்கு மண்டல இணை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் 1,150 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு வீரர்கள் கொண்ட 2 கமாண்டோ படைகள் மீட்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் வெள்ளத்தில் சிக்கி வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த சென்னை பழைய பெருங்களத்தூர் சிடிஓ காலனி, மேற்கு தாம்பரம், சசிவரதன் நகர் குடியிருப்பு பகுதியில் 111 பேர், கொளத்தூர் ஜவஹர் நகரில் 50 பேர் மற்றும் திருவேற்காடு மதிரா சாலையில் 46 பேர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை தி.நகர் பசுல்லா சாலை, வேளச்சேரி, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, திருவான்மியூர் எல்பி சாலை, தாம்பரம் முடிச்சூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் நீர் இறைக்கும் பம்பு மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

சென்னை மேற்கு தாம்பரம் சசிவரதன் நகரில் சரளா என்ற கர்ப்பிணி வெள்ள நீரில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தார். அவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கடந்த 5 நாட்களில் வெள்ள நீர் சூழ்ந்த 59 பகுதிகளில் சிக்கி தவித்த 711 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 30 குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை பம்புகள் மூலம் அகற்றினர். 54 இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. வெள்ளநீரில் சிக்கி உயிருக்கு போராடிய நாய், பூனை, மாடு என 891 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

Related Stories: