ஆயுள் சிறைவாசிகள் விவகாரம் அனைத்து தரப்பினரையும் விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளின் அம்சங்கள், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணையில் கணக்கில் கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் 38 முஸ்லிம் சிறைக்கைதிகள் 10 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் அரசின் கருணை மூலம் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். ஆனால், தொடரும் பாரபட்ச போக்கால் மரணம் மட்டுமே அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வருகின்ற அவலம் தொடர் கதையாகி வருகின்றது.

அதேபோல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலையில் அடைபட்டுள்ளனர். அவர்களும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலையை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பையும் தமிழக அரசின் அரசாணை ஏமாற்றியுள்ளது. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் எவ்வித சட்ட சிக்கலோ, நீதிமன்ற தடையோ இல்லை. முழுக்க முழுக்க அது மாநில அரசின் முடிவில் உள்ளது. ஆகவே, ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் பாரபட்சத்தை போக்கி அனைத்து தரப்பினருக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்காக குரலெழுப்ப வேண்டும்.

Related Stories: