தமிழக வனத்துறையினர் சிறைபிடிப்பு ஆர்.பி.எப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரயில் மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன.இதுதொடர்பாக ரயில் ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், ரயில் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வேகம் காட்டும் ‘சிப்’பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விவரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு ரயில் நிலையத்திற்கு சென்றனர்.

ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர். கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்டவிரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். ரயில்வே நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: