சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் வெள்ளத்தில் சிக்கினார்: தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

கீழ்வேளூர்: நாகை அருகே சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் வெள்ளத்தில் சிக்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சிறப்பு எஸ்ஐ மோகன்தாஸ், போலீஸ்காரர்கள் மாஸ்கோ, வினோத் ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை கோகூர் பகுதியில் சாராய வேட்டைக்கு சென்றனர். அப்போது கோகூர், ஆனைமங்கலம் மயானம் அருகே வெட்டாறு கரையில் சாராயம் விற்ற திருக்கண்ணங்குடி, சின்னமுக்கால் வட்டத்தை சேர்ந்த தனராஜ் (22) என்பவரை பிடிக்க துரத்தினர். அவர் போலீசிடம் இருந்து தப்பிக்க வெட்டாற்றில் குதித்தார்.

இதையடுத்து போலீஸ்காரர் மாஸ்கோவும், அவரை பிடிக்க ஆற்றில் குதித்தார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அதில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து மற்ற போலீசார் கிராம மக்கள் உதவியுடன் மாஸ்கோவை தேடினர். மாலையானதால் போதிய வெளிச்சம் இல்லை. தகவலறிந்து கீழ்வேளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் இரவு 8 மணியளவில் கருவேலம் மரத்தில் சிக்கி தவித்த மாஸ்கோவை பத்திரமாக மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். தகவலறிந்து அங்கு வந்த எஸ்.பி ஜவகர், போலீஸ்காரர் மாஸ்கோவிடம் நலம் விசாரித்ததோடு, தீயணைப்பு படை வீரர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

Related Stories: