முதல்வராக இருந்தவருக்கு தெரியாமல் மோசடி நடந்திருக்காது எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சேலம்: சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நேற்று அளித்த பேட்டி: சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, ஆளுநர்கள் காலதாமதமின்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை, விரைந்து அனுப்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து கோரியுள்ளார். எந்த சட்ட மசோதாவாக இருந்தாலும், அதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள ரூ.4000 கோடி வெள்ள நிவாரண நிதியை, ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் உதவியாளர்களாக இருந்தவர்கள் மீது, நிறைய மோசடி வழக்குகள் உள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) கூட ரூ.1 கோடி மதிப்புள்ள முந்திரி லோடு ஏற்றி வந்த லாரியை கடத்தி வந்த அதிமுக முன்னாள் மந்திரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் போல், வேறு சில அமைச்சர்களின் உதவியாளர்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு இல்லாமல் அவரது உதவியாளர், அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருக்க சாத்தியமில்லை. அவருக்கு தெரியாமல் மோசடி செய்ய முடியாது. அதனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்.   

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: