டாஸ்மாக் ஊழியரிடம் வாகன சோதனைபோல் நடித்து ரூ.2.33 லட்சம் திருடிய போலீஸ்காரர் கைது: திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிபவர்

சோளிங்கர்: சோளிங்கர் அருகே வாகன சோதனை நடத்துவது போல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.2.33 லட்சம் திருடிய போலீஸ்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த இரண்டடி ஊராட்சி ஏரி மின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(45). இவர் பாணாவரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வசூலான ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 130ஐ தனது பைக் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

வீட்டின் அருகே சென்றபோது, பைக்கில் போலீஸ் உடையில் வந்த ஒருவரும், உடனிருந்தவரும், பழனியை தடுத்து நிறுத்தி, ‘‘பைக்கின் ஆர்சி புக், லைசன்ஸ் உள்ளதா’’ எனக்கேட்டுள்ளனர். அதற்கு பழனி ‘‘ஆர்சி புக் வீட்டில் இருக்கிறது’’ என்றார். அப்போது, அவர்கள் பைக்கை இங்கேயே நிறுத்திவிட்டு வீட்டிலிருந்து ஆர்சி புக்கை கொண்டு வருமாறு கூறினர். இதையடுத்து பழனி பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு 50 அடி தூரத்தில் இருந்த வீட்டிலிருந்து பைக்கின் ஆர்சி புக்கை கொண்டு வந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட 2 பேரும் அங்கு இல்லை.

சந்தேகமடைந்த பழனி, பைக் பெட்டியை பார்த்தபோது பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 130ஐ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனி புகாரின்படி சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இதன் அடிப்படையில் சோளிங்கர் அடுத்த கீழாண்டை மோட்டூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த ரகு (29), மேற்கு போர்டின் பேட்டை பகுதியை சேர்ந்த தனா(எ)தனசேகர்(27) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் ரகு, திருவள்ளூர் மாவட்ட மோப்பநாய் பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருவதும், தனசேகர் ஏற்கனவே 3 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், நண்பர்களான இருவரும் வாகன தணிக்கை செய்வதுபோல் நடித்து பழனியின் பைக்கில் இருந்த ரூ.2.33 லட்சத்தை திருடியது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: