பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15.97 கோடி நிவாரணம்

சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 15 கோடியே 97 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்து வருகிறது. பருவமழையால் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. பல மாவட்டங்களில் கால்நடைகளும், குடிசைகளும், கட்டிடங்களும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றிய அரசிடம் இருந்து தமிழக அரசு ரூ.4,625.80 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளது. இதேபோல், தமிழக அரசு சார்பில் பருவமழையால் உயிரிழந்த 59 பேரின் குடும்பத்துக்கு ரூ.2.36 கோடியும், 2,943 கால்நடைகள் பாதிப்பிற்கு ரூ.3,43,71,000, காயமடைந்த 13 பேருக்கு ரூ.55,900, 24,810 குடிசைகள் பாதிப்புக்கு ரூ.10,17,21,000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக நேற்று வரையில் ரூ.15,97,47,900 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: