கதவணை, தடுப்பணை, புதிதாக நீர்நிலைகள் அமைக்க ரூ.16 ஆயிரம் கோடி நிதி கேட்டு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நீராதாரங்களை பெருக்க நீர்வளத்துறை என்கிற தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த துறை சார்பில் மாநிலம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கதவணைகள் அமைக்கப்படும் என்றும் புதிதாக 8 நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

அதே போன்று, தமிழகத்தில் புதிதாக ஏரிகள் புனரமைக்கவும், புதிதாக அணைக்கட்டுகள் கட்டப்படும் என்றும், இதற்காக நடப்பாண்டில் மட்டும் நீர்வளத்துறை மூலம் ரூ.16 ஆயிரம் ேகாடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளவும் அமைச்சர் துரைமுருகன் முடிவு செய்து இருந்தார். இதையடுத்து முதற்கட்டமாக 500 இடங்களில் தடுப்பணை, புதிதாக 6 இடங்களில் கதவணை அமைக்கப்படுகிறது. மேலும், ஆற்றப்படுகைளில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் கடைமடைகளில் நீரொழுங்கிகள் ஏற்படுத்தப்படுகிறது. இதன். மூலம் கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புதன்மை குறைவது மட்டுமின்றி அங்கு பாசன வசதிகளுக்கு அந்த நீரை பயன்படுத்த முடியும். இதற்காக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் தடுப்பணை, கதவணை, புதிதாக நீர்நிலைகள் அமைக்கவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து, இப்பணிகளுக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், நீர்வளத்துறை திட்டம் மற்றும் உருவாக்க பிரிவு தலைமை பொறியாளர் பொன்ராஜ், கட்டுமான ஆதாரம், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தலைமை பொறியாளர் தனபால் தலைமையிலான பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசிடம் நிதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைத்து, நிதி விடுவிக்கப்பட்டவுடன் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: