பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கலாகிறது; அரசுக்கு கடும் நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா  தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, 26 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் பெகாசஸ் விவகாரம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் எஞ்சிய கோரிக்கைகள் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் நெருக்கடி தர முடிவு செய்துள்ளன.

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, வேலையில்லா திண்டாட்டம், புதிய வகை வைரசால் மீண்டும் கொரோனா பீதி அதிகரித்துள்ளது, குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென விவசாயிகள் 6 புதிய கோரிக்கைகள் விடுத்திருப்பது என பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடக்கிறது.

இன்றைய முதல் நாள் கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுவதால், எதிர்க்கட்சிகள், பாஜ ஆகியவை தங்கள் எம்பிக்களை அவைக்கு தவறாமல் ஆஜராக உத்தரவிட்டுள்ளன. இந்த மசோதா உட்பட 26 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டஅங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளன. அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் உயிரிழந்த விவாயிகளுக்கு இரங்கல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டத் தொடர் முழுவதும் கடும் அமளியும், பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன மசோதாக்கள்?

மத்திய அரசு சார்பில் இந்த கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அதில் முக்கிய சில மசோதாக்கள்:

* கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிக்கள் தடை செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவர அனுமதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படும்.

* அவசரச்சட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட போதை மருந்து தடுப்பு மற்றும் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டு வரை நீட்டிக்கும் விவகாரம் என 3 அவசர சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளன.

* உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், அதையொட்டி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் திருத்தச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய திருத்த மசோதா 2021 நிறைவேற்றப்பட உள்ளது.

இது தவிர திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு மசோதா, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஊதியத்தில் திருத்தச்சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா குறித்த நாடாளுமன்ற இணை குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

* அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் பங்கேற்கவில்லை

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜூனா கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தேசியவாத காங்கிரசின் சரத் பவார், சிவசேனாவின் விநாயக் ராத் உட்பட 31 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பெகாசஸ் விவகாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சீன எல்லை விவகாரம் குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார எல்லை நீட்டிப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தனி சட்டம் கொண்டு வருவதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது ஆகிய விவகாரங்களையும் விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டுமென அரசு தரப்பில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

* காங். தலைமையில் இன்று ஆலோசனை

குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே ஏற்கனவே அனைத்து கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதில் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எந்தெந்த பிரச்னைகளை எழுப்புவது, எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* டிராக்டர் பேரணி திகைத் எச்சரிக்கை

நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான தனி சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், குடியரசு தினம் வெகு தூரத்தில் இல்லை. 4 லட்சம் விவசாயிகள், டிராக்டர்கள் தயாராக உள்ளன’’ என கூறி உள்ளார். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

* மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தின.

* வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு வாக்குறுதி அளித்துள்ளதால், நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து கட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு பேச அனுமதிக்காததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: