வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரள வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ‘ஒமிக்ரான் வைரஸ்’ பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவில்ைல. ஆனாலும் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, போர்ட்ஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரிசீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வருபவர்கள் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அங்கிருந்து வருபவர்களில் 5 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். கேரளாவுக்கு வந்த பிறகும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்த வேண்டும். தொடர்ந்து 7 நாள் தனிமை காலம் முடித்த பின்னரும் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: