நூற்றுக்கணக்கான கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை வடசேரி அசம்பு ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்: குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பகுதி புதை மணலாக மாறியது

நாகர்கோவில்: வடசேரி அசம்பு ரோட்டில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை சேறும், சகதியுமாக மாறி புதை மணலாக உள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதி அசம்பு ரோடு ஆகும். மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த சாலைய விரிவாக்கம் செய்வதற்காக அதிகாரிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. குறிப்பாக வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் இருந்து எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி வரையிலான சந்திப்பு வரை இந்த சாலை குறுகிய தெருவை போல் உள்ளது.

பகல் வேளைகளில் இந்த பகுதியில் சாலையின் இருபக்கமும் நிறுத்தப்படும் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியை அதிகப்படுத்தி வருகின்றன. போக்குவரத்து போலீசாரும் இந்த சாலையில் வாகனத்தை ஒழுங்குப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, அருமநல்லூர், கடுக்கரை, சீதப்பால், காட்டுப்புதூர் போன்ற 4 ரூட் பஸ்கள் இந்த சாலை வழியாக தான் செல்கின்றன. இதனால் அதிகாலையில் இருந்து இரவு வரை எப்போதும் வாகன போக்குவரத்தும், நெருக்கடியும் இருந்து கொண்டே இருக்கும். இந்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பகல் வேளையில் லாரிகளில் லோடு இறக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதையும் காவல்துறை கண்டு கொள்வது கிடையாது. போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் சிக்கி திணறி வரும் நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் குடிநீர் திட்டத்துக்காக இந்த சாலை தோண்டப்பட்டது. இரவோடு இரவாக மின்னல் வேகத்தில் பணியை முடித்தனர். குழாய் பதித்த பின் அந்த பகுதியில் வெறும் மணலை மட்டும் நிரப்பி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மட்டும் மேடாக இருந்தது. இரு நாட்கள் பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறியது. தற்போது குழாய் பதித்த பகுதி புதை குழி போல் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. குறிப்பாக அசம்பு ரோட்டில் உள்ள காமாட்சிஅம்மன் கோயில் அருகில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

ஏற்கனவே குறுகிய சாலையில், ஒரு பகுதியில் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு புதை மணலாக மாறி கிடப்பது, மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. முக்கிய போக்குவரத்து பகுதி என்பதால், உடனயடிாக குழாய் பதித்த பகுதிகளில் மட்டுமாவது சாலையை சமன் செய்து, ஜல்லிகள் நிரப்பி வாகனங்கள் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் முன் வந்து, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆம்புலன்ஸ் சிக்கி தவிப்பு

அசம்பு ரோட்டில் நேற்று மாலை ஏற்பட்ட நெருக்கடியில் ஆம்புலன்சும் சிக்கியது. சுமார் 20 நிமிடங்கள் வரை ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் நேருக்கு நேர்  நின்றதால் ஆம்புலன்சுக்கு வழி விட முடியாத நிலை ஏற்பட்டது. நோயாளியை ஏற்றி செல்ல இருந்த ஆம்புலன்ஸ் சிக்கி திணறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த சாலையை சீரமைக்க கவனம் செலுத்தினால், பல உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

Related Stories: