×

வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம்: இளம்பெண்ணுக்கு ஆம்னி பஸ்சில் பிரசவம்

ஆம்பூர்: ஒடிசா மாநிலம் லட்சுமிநாராயணா மாதிர் கிராமத்தை சேர்ந்தவர் கோகேஷ்மாலிக்  மகன் சமீர்குமார்மாலிக். இவரது மனைவி சுக்ரியா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சமீர்குமார் மாலிக்கும், சுக்ரியாவும் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் வசித்து வருகின்றனர். அங்கு சமீர்குமார்மாலிக், ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சுக்ரியா கர்ப்பிணியான தகவல் ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சமாதானமடைந்த அவர்கள் சொந்த ஊருக்கு வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சமீர்குமார்மாலிக்கும், சுக்ரியாவும்  ஒடிசாவுக்கு செல்ல பெங்களூரில் இருந்து நேற்றிரவு ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் புறப்பட்டனர். சுமார் 11 மணியளவில் அந்த பஸ் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது சுக்ரியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் பஸ்சிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பஸ்சில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே விரைந்து வந்த ஆம்புலன்ஸில் தாயையும், குழந்தையையும் ஏற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாய்க்கும், குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பின்னர் அவர்கள் ரயில் மூலம் சென்னை வழியாக ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Omni Busch , Leaving home and getting married for love: giving birth to a teenager on an Omni bus
× RELATED 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரதமர்...