மீண்டும் மீண்டும் மழை: வடசென்னை வெள்ளத்தில் மிதக்கிறது

தண்டையார்பேட்டை: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கடந்த 3  நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பல இடங்களில் மழைநீர் தேங்கிநிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்களால் பல இடங்களில் விபத்து ஏற்படுகிறது. வடசென்னையில் தாழ்வான பகுதிகளான ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பாரிமுனை, கொத்தவால்சாவடி, மண்ணடி, ஏழுகிணறு, யானைக்கவுனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில்  மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் தேங்கி நிற்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வழிந்தோடுகிறது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டையார்பேட்டை திலகர் நகர், அண்ணா தெரு, வீராகுட்டி தெரு, கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், பாரதி நகர், சுண்ணாம்பு கால்வாய், வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர், அம்மணி அம்மன் தோட்டம், காசிமேடு சி.ஜி.காலனி,

பவர் குப்பம், தண்டையார்பேட்டை, தமிழன் நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடசென்னை பகுதிகளில் இனியாவது மழைநீர் தேங்காதவகையில் மாநகராட்சி அதிகாரிகளும், குடிநீர் வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவொற்றியூர்: தொடர் மழைகாரணமாக  தாழ்வான பகுதிகளான திருவொற்றியூரில் கார்கில்நகர், வெற்றிநகர், பெரியார்நகர், ராஜாஜிநகர், ஒத்தவாடைதெரு, ஜோதிநகர், மணலியில் எம்ஜிஆர்நகர், மாதவரத்தில் தணிகாசலம் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

Related Stories: