இறந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்ய சென்ற 18 பேர் விபத்தில் பலி: மேற்குவங்கத்தில் நேற்றிரவு சோகம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில்  இறந்த பெண் ஒருவரின் சடலத்தை ஏற்றிச் சென்ற வாகனம், நேற்றிரவு லாரி மீது மோதிய விபத்தில் 18 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்குவங்க மாநிலம் நாடியா அடுத்த பாக்தாவிலிருந்து இறந்த வயதான பெண் ஒருவரின் சடத்தை தகனம் செய்வதற்காக வாகனம் ஒன்றில் வைத்து நேற்றிரவு சுடுகாட்டிற்கு இறந்தவரின் உறவினர்கள் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தில் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இந்நிலையில் ஹன்ஸ்கலி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஹன்ஸ்காலி-கிருஷ்ணாநகர் சாலையில் புல்பரி பகுதியில், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சடலத்தை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இறந்தவரின் உடலை தகனம் செய்வதற்காக சுமார் 20க்கும் மேற்பட்டோர் சடலம் ஏற்றச் சென்ற வாகனத்தில் அமர்ந்து கொண்டு நேற்றிரவு புல்பரி நோக்கிச் சென்றனர். அப்போது நின்றிருந்த லாரி மீது சடலம் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியது. முதற்கட்ட விசாரணையில் இப்பகுதியில் அடர்த்தியான பனிமூட்டம் இருந்ததாலும், அதிக வேகமாக சடலம் ஏற்றிச் சென்ற வாகனம் வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. ெதாடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறோம்’ என்றார்.

மேற்குவங்கத்தில் நடந்த சோகமான இச்சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உதவிகளை அறிவித்துள்ளார்.

Related Stories: