கட்டாய திருமண ஏற்பாடு: கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர், சீனிவாச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (38). மண்ணூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மோகனப்பிரியா(18) காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அண்ணன் செல்வராஜ் வீட்டுக்கு குடும்பத்துடன்  ரமேஷ் சென்றுள்ளனர். அப்போது, மோகன பிரியா வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

வீட்டுக்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி  தீவைத்துள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்  மோகனப்பிரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மோகன பிரியாவை உறவினர் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.  இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

More