தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்; 820 மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றம்: இரவு பகலாக களத்தில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள்

சென்னை: தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 820 மின்மோட்டர்கள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி-பூந்தமல்லி நெடுஞ்சாலை கமி‌ஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக மழை நீர் வடிந்த இடங்களில் எல்லாம் தற்போது மீண்டும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 500 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வடிகால்களை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும் தி.நகர், வளசரவாக்கம், கே.கே.நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, கிண்டி சர்தார்வல்லபாய் படேல் சாலை போன்ற தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 820 மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மழை விட்டு விட்டு பெய்த நிலையில் இன்று காலையில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால் பல்வேறு தெருக்கள், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் இன்று பெரும்பாலான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்பட்டதையடுத்து போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்பட்டது.

மேலும் கடந்த மழையின் போது 22 சுரங்கப்பாதைளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையில் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. மேலும் மழை இல்லாத நிலையில் தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்று அல்லது நாளைக்குள் முழுவதுமாக அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: