சென்னையில் 482 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது; நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது: பரமக்குடியில் 224 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் புதிதாக பயிர்கள் சேதம் அடைந்திருப்பதை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 228 இடங்களில் அதிக திறன் கொண்ட பம்புசெட்கள் மூலம் நீர் வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழகம் முழுவதும் 188 முகாம்களில் 15,016 பேரும், சென்னையில் மட்டும் 7 நிவாரண முகாம்களில் 1048 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் இருக்கும் நபர்களுக்கு 98,350 உணவு பொட்டலங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்தனர். 284 கால்நடைகள் இறந்துள்ளது. 1814 குடிசைகள் இடிந்துள்ளது. 319 வீடுகள் சேதமடைந்துள்ளது. சென்னையில் 482 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதில் 111 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புசெட்கள் மூலம் நீர் வெளியேற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

அதற்காக 46 ஜேசிபிகளும், 820 பம்புசெட்களும், 54 மீட்பு படகுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டு நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்று காலை முதல் மழை பெய்யாத காரணத்தால் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: