×

டெல்டாவில் தொடர் மழை: 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மீண்டும் மூழ்கியது: விவசாயிகள் கவலை

திருச்சி: டெல்டாவில் தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மீண்டும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். இலங்கை அருகே காற்று சுழற்சி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாலும், வங்க கடல் பரப்பில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வருவதாலும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகள், தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து வடியாமல் இருந்து வருகிறது. கனமழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் ஆரியநாட்டு தெரு, புதிய நம்பியார் நகர், நாகூர் எம்ஜிஆர் நகர், வேளாங்கண்ணி பூக்காரதெரு சுனாமி குடியிருப்பு, அந்தணபேட்டை சுனாமிகுடியிருப்பு என தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து வடியாமல் இருந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரியாறு வெள்ளம் திருச்சி தீரன்நகர் பகுதியில் கோரையாற்றில் கலந்து பின்னர் காவிரியில் கலக்கும். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இனியானூர் கிராமத்தில் வெள்ளம் புகுந்தது. இனியானூரிலிருந்து வெள்ளநீர் தீரன்நகர், பிராட்டியூர் மேற்கு முருகன் நகர், வர்மா நகர், குபேரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு ஓடுகிறது. இதனால் தீரன்நகரில் பகுதியிலிருந்து முருகன் நகர் வரை திருச்சி-திண்டுக்கல் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. துவரங்குறிச்சி அருகே கஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட ராசிப்பட்டி கிராமம் அருகே உள்ள வீரசமுத்திரம் கண்மாய் நிரம்பி உள்ளது. கண்மாயின் ஒரு பகுதியில் வடிகால் அமைத்து உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மருங்காபுரி ஒன்றியம் வேம்பனூர் பெரியகுளம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

திருச்சி தீரன்நகரில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதக்கிறது. தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கருமண்டபம் பகுதியில் உள்ள குளம் நிரம்பி தனியார் கல்லூரி விடுதி வழியாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சாலை மற்றும் கல்லூரி வளாகத்துக்குள் கழுத்தளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தரைதளத்தில் உள்ள வகுப்பறைகளுக்கும் தண்ணீர் புகுந்ததால் டேபிள், பென்ஞ்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அந்த கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. உறையூர் லிங்கா நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் 50 பேரை பரிசல் மூலம் மீட்டனர். கோரையாற்றையொட்டி பகுதியான எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, படுகை, டோபிகாலனி, அன்பிலார் நகர் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதே போல் தொடர் மழைக்கு டெல்டா மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 52ஆயிரம் ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர், திருச்சியில் திருவெறும்பூர், லால்குடி, சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் , பெரம்பலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் 2 ஆயிரம் ஏக்கரில் மக்காசோளம், பருத்தி, சின்னவெங்காயம், மரவள்ளிக்கிழங்கு என மொத்தம் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழை நீரால் வயல்களில் மீண்டும் சூழ்ந்துள்ளது. டெல்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் விவசாயிகள் வயில்களில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை தொடர்ந்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி ஆறுபோல் காட்சியளிக்கிறது. இதனால் வயல்களில் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற முடியாமலும், விவசாயிகளுடைய வயல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர். கடலில் பலத்த காற்று வீசியதால் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 2 லட்சம் பேர் 3வது நாளாக நேற்று கடலுக்கு செல்லவில்லை.

5 நாட்களாக கடலுக்கு செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றமாக இருப்பதாலும், வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதாலும், மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் காரணமாக 5 நாட்களாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். பரபரப்பாக காணப்படும் கடற்கரையோரம் வெறிச்சோடி காணப்படுகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது பெரும்பாலான கடற்கரை பகுதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளம்
கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை மாவட்டம் அணைக்கரையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் சில தினங்களுக்கு முன் ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆற்றின் கரையோரம் உள்ளவர்களில் மேடான இடங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டனர். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து குறைய ஆரம்பித்தது. ஆற்றில் நீரோட்டமும் குறைந்து சென்றது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆற்றில் மழைநீர் சேர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அணையிலிருந்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று காலை வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விவேகானந்தன் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோரமுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் உடனே மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

120 ஆண்டு பழமையான புளியமரம் சாய்ந்தது
மயிலாடுதுறை அருகே உள்ளது உத்தண்டராயன்பேட்டை, பட்டவர்த்தி சாலையில் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் 100 முதல் 150 வயதுடைய நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. அருகருகே வீடுகளும் உள்ளன. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த மரம் சாயும் நிலைக்கு சென்றுவிட்டது. நேற்று முன்தினம் அந்த மரத்திற்கும் கிழக்கு பக்கத்தில் வசந்தா(75) என்பவர் வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டார். அவரது இறுதிசடங்கில் கலந்துகொள்ள நேற்று அவரது உறவினர்கள் திரண்டிருந்தனர். மூதாட்டியின் சடலத்தை குளிப்பாட்டுவதற்காக அனைவரும் தயாராகி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் சாய ஆரம்பித்தது. துக்கவீட்டில் இருந்த அனைவரும் அந்த வீட்டைவிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கண் இமைக்கும் நேரத்தில் புளியமரம் அப்படியே சாய்ந்தது. அதன் கிளைகள் அந்த வீட்டின்மீது விழுந்து வீட்டை நசுங்கியது, பகல் நேரமாக இருந்ததாலும், புளியமரம் சாய்வது குறித்து சத்தம்போட்டதாலும் அங்கிருந்தவர்கள் தப்பினர். தகவல் அறிந்த ஆர்டிஓ பாலாஜி மற்றும் வருவாய் துறையினர் சென்று பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.


Tags : Delta , Delta, continuous rains, farmers
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!