சிறுமலை ஆணைவிழுந்தான்- ராமக்கால் நீர்த்தேக்கத்தில் மதகு பழுதால் தண்ணீர் வீண்.!

சின்னாளபட்டி: திண்டுக்கல் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் உள்ளது ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கம். வெள்ளோடு, செட்டியபட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்களின் நீராதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி ஏற்பாட்டில் ரூ.6 கோடி செலவில் இந்நீர்த்தேக்கம் சீரமைக்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நீர்த்தேக்கம் பராமரிக்கப்படவில்லை. இதனால் கடந்தாண்டு ராமக்கால், ஆணைவிழுந்தான் ஓடை நீர்தேக்கத்தில் தண்ணீர் வெளியேறியது. இந்த ஆண்டும் பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காததால் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கத்தின் மதகு சேதமடைந்துள்ளதால் தற்போது அதன் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

இதனால் கடந்த 2 தினங்களாக இப்பகுதியில் அதிகளவில் மழை பெய்தும் நீர்த்தேக்கத்தில் சிறிதளவே தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து வெள்ளோடை சேர்ந்த நீர்ப்பாசன விவசாயி பீட்டர் கூறுகையில், ‘வருடத்திற்கு ஒருமுறை கூட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்ய வருவதில்லை. பிறகு எப்படி நீர்த்தேக்கத்தை பராமரிக்க முடியும். சேதமடைந்த மதகை உடனடியாக சீரமைக்காவிட்டால், ஒரு சொட்டு தண்ணீரை கூட தேக்கி வைக்க முடியாது’ என்றார். இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் தங்கவேலு கூறுகையில், ‘மணல் மூட்டைகளை வைத்து முதல் கட்டமாக சேதமடைந்த மதகு வழியாக வெளியேறும் தண்ணீரை நிறுத்த முயற்சி செய்கிறோம்’ என்றார்.

Related Stories: