நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு காரைக்காலில் இருந்து 2650 டன் யூரியா ரயிலில் வருகை: லாரிகளில் பிரித்து அனுப்பப்பட்டது

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு காரைக்காலில் இருந்து 2 ஆயிரத்து 650 டன் யூரியா ரயிலில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இந்த உரம் லாரிகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. விவசாயிகள் குறித்த காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடியை துவங்கியுள்ளனர். நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்து வந்து வயல்களில் நடவு செய்துள்ளனர். இன்னும் சில பகுதிகளில் நடவு பணிகளும் நடந்து வருகிறது.

எப்போதுமே நெல் நாற்றுகள் நட்டவுடன் அடியுரமாக யூரியா இடப்படுவது வழக்கம். இதற்காக யூரியா உரம் பிசான பருவ நெல் சாகுபடிக்கு கொண்டு வர நெல்லை கலெக்டர் விஷ்ணு நடவடிக்கை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து காரைக்காலில் இருந்து 2 ஆயிரத்து 650 டன் யூரியா ரயில் மூலம் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதில் 800 டன் நெல்லை மாவட்டத்திற்கும், 500 டன் தென்காசி மாவட்டத்திற்கும், 1,350 டன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ரயிலில் இருந்து இறக்கப்பட்ட உர மூடைகள் லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் 50 சதவீதம் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், 50 சதவீதம் உரங்கள் தனியார் விற்பனை கடைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் கூறுகையில், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி, தனியார் உரக்கடைகளில் 45 கிலோ உர மூடைகள் அரசு நிர்ணயித்த விலையான ரூ.266.50க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு ஆதார் நகல் மூலம் பாய்ண்ட் ஆப் சேல் இயந்திரம் மூலமே உர மூடைகள் விற்பனை செய்ய வேண்டும். அதிகபட்ச விலைக்கு உரங்கள் விற்பனை செய்வது. உர மூடைகளை பதுக்கி பற்றாக்குறை ஏற்படுத்துவது போன்ற எந்த ஒரு புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு புகார் வந்தால் தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர்கள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கண்காணிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நெல்லை மாவட்ட உர தேவைக்காக, அடுத்த கட்டமாக ஸ்பிக், எம்எப்எல் நிறுவனங்களில் இருந்தும் யூரியா கொண்டு வரப்பட உள்ளது என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: