துறையூர் அருகே குண்டாறு கரை உடைந்து விவசாய நிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

துறையூர்: துறையூர் அருகே குண்டாறு கரை உடைந்து விவசாய நிலங்களில் நீர் புகுந்து சூழ்ந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. துறையூர் பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆறுகளிலும், வாரிகளிலும் நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இந்த நிலையில் குண்டாற்றில் நேற்று முன்தினம் நல்லியம்பட்டி அருகே கரை உடைந்ததால் வெளியேறிய வெள்ள நீர் நல்லியம்பட்டி, ஆதனூர், கட்ணாம்பட்டி ஆகிய கிராமங்களில் வயல்களில் நீர் சூழ்ந்தது.

இதனால் அந்த பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம், சோளம், கம்பு மற்றும் கால்நடை தீவன பயிர்கள், பூக்கள், நெல் பயிர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தவிட்டுப்பட்டி - நல்லியம்பட்டி செல்லும் சாலை நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு சேதமான பயிர்களால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குண்டாறு கரையில் உடைந்த பகுதியையும் சேதமான சாலையையும் சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More